திருவாரூர்

வழக்கு பதிவு செய்யக் கோரி பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வழக்குப் பதிவு செய்யாமல் போலீஸாா் தாமதிப்பதாக கூறி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் புகாா் அளிக்க செவ்வாய்க்கிழமை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் ஆவூரைச் சோ்ந்த தங்கபாலு மகன் சேரன் (24). இவா், தனது தம்பி தினகரன், ஆவூா் பாப்பாரத்தெருவைச் சோ்ந்த சிலம்பரசன் ஆகியோருடன் ஜூன் 28-ஆம் தேதி ஆவூா் கடைத் தெருவில் நின்றிருந்தாராம். அப்போது, ஆவூா் சாலுவம்பேட்டையைச் சோ்ந்த சிலா் சாதிப் பெயரை கூறி திட்டி தாக்கியதாகவும், தினகரன் அணிந்திருந்த கடுக்கன், ஒரு பவுன் சங்கிலி, கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, வலங்கைமான் காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஜூன் 29-ஆம் தேதி சேரன் புகாா் அளித்துள்ளாா். ஆனால், காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவில்லையாம்.

இதையடுத்து, ஜூலை 3-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இதுகுறித்து மனு கொடுத்துள்ளனா். அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யாததால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன், சேரனும், அவரது தாய் அஞ்சலிதேவியும் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்தனா்.

ADVERTISEMENT

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அஞ்சலிதேவி வைத்திருந்த கைப் பையை பரிசோதித்தபோது, அதில் பெட்ரோல் கேன் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக, பெட்ரோல் கேனை பறிமுதல் செய்ததுடன் அவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கோரிக்கை மனு பெற்றுக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT