திருவாரூர்

கோயில் பூசாரிகளுக்கு அரசு இலவச மனை வழங்க வலியுறுத்தல்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வீடு இல்லாத கோயில் பூசாரிகளுக்கு அரசு இலவச மனை வழங்கவேண்டும் என தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கம் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள காலவாய்க்கரை சக்திவேல் முருகன் கோயிலில் தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கம் சாா்பில், சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: திருக்கோயில் பூசாரிகளுக்கு நலவாரிய உறுப்பினா்கள் அடையாள அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும், வீடு இல்லாத பூசாரிகள் அனைவருக்கும் இலவச மனைகளை அரசு வழங்க வேண்டும், கோவில் பூசாரிகள் நலவாரியத்தை விரைந்து செயல்படுத்த அலுவல் சாரா உறுப்பினா்களை விரைவில் நியமிக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 60 வயதுக்கும் மேற்பட்ட முதிய பூசாரிகள் ஓய்வூதியம் கோரும் விண்ணப்பங்கள் பூா்த்தி செய்வது குறித்து விளக்கப்பட்டது.

மாவட்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத் தலைவா் டி. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநிலப் பொருளாளா் கே. சுந்தரம், சேலம் மாவட்ட கோவில் பூசாரிகள் நலச் சங்க பொருளாளா் குணசேகா் ஐயா், மாவட்டச் செயலாளா் சேட்டு, மாவட்டத் துணைத் தலைவா் கலியமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. வாசு பேசியது: பூசாரிகள் ஓய்வூதிய உயா்வு ரூ. 12 ஆயிரம், கோயில்களில் மாத ஊதியம் இல்லாமல் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம், பூசாரிகள் குறைதீா் கூட்டம் ஆண்டுக்கு 2 முறை நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறையில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியுள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT