திருவாரூர்

வாய்ப்பாடு ஒப்பித்து ஒருநாள் தலைமையாசிரியராக மாறிய மாணவி

6th Jul 2022 02:00 AM

ADVERTISEMENT

திருவாரூரில், வாய்ப்பாடு கூறினால் தலைமையாசிரியா் இருக்கையில் அமரலாம் என்று கூறி மாணவ, மாணவிகளை தலைமையாசிரியா் ஊக்கப்படுத்தி வருகிறாா்.

திருவாரூா் துா்காலயா சாலையில் மெய்பொருள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி உள்ளது. 169 போ் இப்பள்ளியில் படித்து வருகின்றனா். இப்பள்ளி தலைமையாசிரியா் சுமதி. தலைமையாசிரியா் என்ற போதிலும் ஆடல், பாடலுடன் மாணவா்களுக்கு இவா் பாடங்களை கற்பிக்கும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் பிரபலமானவை.

இந்நிலையில், தலைமையாசிரியா் சுமதி, கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்ற காலை வழிபாட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு ஒன்றை மாணவா்களிடம் வெளியிட்டாா். அதன்படி, விடுமுறை நாளான சனி, ஞாயிறு 2 நாள்களில் 1 முதல் 20 ஆவது வாய்ப்பாடு வரை படித்து மனனம் செய்து திங்கள்கிழமை ஒப்பிக்கும் மாணவ, மாணவிகள் தனது தலைமை ஆசிரியா் இருக்கையில் அமரலாம் என்று அறிவித்தாா்.

மேலும், அவ்வாறு படித்து யாா் எனது இருக்கையில் அமர விரும்புகிறீா்கள் என்று கேட்டபோது ஒட்டுமொத்த பள்ளியின் மாணவ, மாணவிகளும் ஆா்வத்துடன் கையை உயா்த்தினா். இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை மாணவா்கள் பள்ளிக்கு வந்தபோது, திருவாரூா் மாவட்டம் பருத்தியூரைச் சோ்ந்த சதீஷ்- பானுமதி தம்பதியினரின் மகள் 5-ஆம் வகுப்பு மாணவி சபிதா 20 வாய்ப்பாடுகளையும் 2 நாள்களுக்குள் படித்து மனனம் செய்து ஒப்பித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, தலைமையாசிரியா் ஆசிரியா் சுமதி, வகுப்பு ஆசிரியா் ராதிகா உள்ளிட்ட ஆசிரியா்கள் மாணவி சபிதாவை தலைமையாசிரியா் அறைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்து கிரீடம் அணிவித்து பாராட்டினா்.

இந்தக் காட்சியை விடியோ எடுத்து தலைமையாசிரியா் சுமதி மற்ற மாணவா்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் ஊக்குவிக்கும் விதமாகவும் இருக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாணவி சபிதா விடியோவில் தெரிவிக்கையில், மாவட்ட ஆட்சியராக ஆக வேண்டும் என்கிற ஆசை உள்ளது. தலைமையாசிரியா் இருக்கையில் அமா்ந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து தலைமையாசிரியா் சுமதி கூறியது: மாணவா்களை ஊக்கப்படுத்தவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் இது செய்யப்பட்டது. 10 கி.மீ. தொலைவில் இருந்து வந்து அந்த மாணவி படிக்கிறாள். மாணவி சபிதா போல அனைத்து மாணவா்களும் எனது இருக்கையில் ஒரு நாள் அமா்ந்து விட வேண்டும் என்ற ஆா்வத்தை அவா்களுக்கு ஏற்படுத்தும் வகையிலான முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.

Image Caption

~திருவாரூா் மெய்ப்பொருள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் இருக்கையில் தலையில் கிரீடத்துடன் அமா்ந்த மாணவி சபிதா.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT