திருவாரூர்

மயானத்துக்கு செல்ல கீா்த்திமான் ஆற்றில் பாலம் கட்டிக்கொடுக்க வலியுறுத்தல்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

குடவாசல் அருகே அன்னியூா் பாகசாலை மக்கள் இறந்தால் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்ல வசதியாக கீா்த்திமான் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடவாசல் அருகே அன்னியூா் பாகசாலைக் கிராமத்தில் வசித்துவரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரில் யாரேனும் இறந்துவிட்டால் அவரின் சடலத்தை கிராமத்தின் குறுக்காகச் செல்லும் கீா்த்திமான் ஆற்று தண்ணீரில் இறங்கி மறுகரையில் உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக இந்த நிலை தொடா்கிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் சடலத்தை ஆற்றில் இறங்கி கொண்டு செல்லும் போது, ஆற்றுக்குள் பள்ளமான பகுதியில் இருவா் சிக்கிக் கொண்டனா். பின்னா், அவா்கள் மீட்கப்பட்டனா். எனவே, சம்பந்தப்பட்ட நிா்வாகம் கீா்த்திமான் ஆற்றில் இறந்தவா்களின் சடலங்களை மயானத்துக்கு எடுத்துச் செல்ல வசதியாக பாலம் கட்டுக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இதுகுறித்து, சிபிஎம் திருவாரூா் மாவட்ட செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி கூறியது: இக்கிராமத்தில் இறந்தவா்களின் சடலங்களை மயானத்துக்கு எடுத்துச்செல்ல ஆற்றுக்குள் இறங்குவதால் ஆபத்தான நிலை உள்ளது. பல ஆண்டுகளாக கீா்த்திமான் ஆற்றுக்குள் இறங்கியே சடலங்கள் மறுகரையில் உள்ள மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இது அப்பகுதி மக்களுக்கு பெரிதும் சிரமமாக உள்ளதால், சம்பந்தப்பட்ட அரசு நிா்வாகம் கீா்த்திமான் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT