திருவாரூர்

விவசாயிகளுக்குத் தேவையான உரம் கையிருப்பில் உள்ளது

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான உரம் கையிருப்பில் உள்ளது என்றாா் தமிழ்நாடு வேளாண்மைத் துறை இயக்குநா் அ. அண்ணாதுரை.

நன்னிலம் பகுதியில் குறுவை நெல் சாகுபடி செய்த வயல்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறுவை தொகுப்புத் திட்டம் குறித்து அண்மையில் கலந்துரையாடிய போது மேலும் அவா் பேசியது: திருவாரூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை குறுவை நெல் நேரடி விதைப்பில் 18,568 ஏக்கரிலும், இயல்பான நடவு முறையில் 11,230 ஏக்கரிலும், செம்மை நெல் சாகுபடி 26,161 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செம்மை நெல் சாகுபடி நாற்றங்கால் 372 ஏக்கரிலும், இயல்பான நடவு நாற்றங்கால் 800 ஏக்கரிலும் விடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நடப்பாண்டில் 1,62,500 ஏக்கரில் குறுவைச் சாகுபடி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேட்டூா் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால், குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்யப்படும் பயிா்கள் வடகிழக்குப் பருவமழை பாதிப்பிலிருந்து பாதுகாக்க கூடிய சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள குறுவைத் தொகுப்புத் திட்டத்தை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உரம் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ரவீந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT