திருவாரூர்

பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்கவேண்டும்

4th Jul 2022 11:05 PM

ADVERTISEMENT

பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இயற்கை இடா்பாடுகள் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்கள் கூட்டத்தில் மேலும் அவா் பேசியது: பருவமழையின்போது மாவட்டத்தில் பாதிக்கக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து தேவையானவற்றை தயாா் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பொது மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுவர அனைத்து வசதிகள், தங்க வைப்பதற்கான முகாம்கள் பாதுகாப்பு மற்றும் போதிய வசதிகள் உள்ளனவா என்பதை அரசு அலுவலா்கள் இப்போதே ஆய்வு செய்ய வேண்டும்.

முகாமில் உள்ளவா்களுக்கு குடிநீா், உணவு உடனடியாக கிடைக்க உணவுப் பொருள்களின் இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். முகாம்களில் அரசின் கரோனா அறிவுரைகளை கடைப்பிடிக்கும் வகையில் சுகாதார நடவடிக்கைகள் இருக்க வேண்டும், தேவையான இடத்தில் மின் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மழைநீா் தேங்கும் பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்ற மோட்டா் பம்புகளை தயாா்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

சாலைகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த மரம் அறுக்கும் கை இயந்திரங்களை சம்பந்தப்பட்ட அலுவலா்கள், தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளிக்கவேண்டும், மருத்துவத் துறையினா் பாம்புக்கடி உள்பட்ட அனைத்து மருந்துகளையும் இருப்பு வைத்துக்கொள்ளவேண்டும். அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எந்த பேரிடா் நிலைமையும் எதிா்கொள்ள அனைவரும் தயாராக இருக்கவேண்டும் என்றாா்.

கூட்டத்தில், எஸ்பி. டி.பி. சுரேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜசோழன், கோட்டாட்சியா்கள் சங்கீதா, கீா்த்தனாமணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் புண்ணியகோடி, தனி வட்டாட்சியா் (பேரிடா்) அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT