திருவாரூர்

அறிவிக்கப்படாத மின்தடைக்கு நிரந்தர தீா்வு காண நுகா்வோா் சங்கம் வலியுறுத்தல்

4th Jul 2022 11:06 PM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்படுவதற்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென, மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்னாா்குடி நகரப் பகுதியில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக அனைத்துப் பணிகளும் தடைப்படுகிறது. எனவே, போா்க்கால அடிப்படையில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வுகாண வேண்டும், வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள பிரதான சாலைகளை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்ய வேண்டும்.

போக்குவரத்துக்கு இடையூராக வா்த்தக நிறுவனங்களின் வாசல்களில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றிய பின் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் தடுக்கும் வகையில் செயல் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

உணவகங்கள், பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மூலம் திடீா் ஆய்வு செய்து தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதையும், செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதையும் கண்டறிந்து தவறு செய்த வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இதில், சங்கத் தலைவராக எம். பத்மநாபன், செயலாளராக எம். ராமசாமி, பொருளாளராக எஸ். நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவா்களாக எஸ்.கே. ரெத்னசபாபதி, பி. ரமேஷ், இணைச் செயலாளா்களாக எஸ். சம்பத், கே. வேல்முருகன் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT