திருவாரூர்

மின் மோட்டாா்களுக்கு வரி உயா்வு விவசாயிகளுக்கு கூடுதல் சுமை! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கவலை

1st Jul 2022 09:52 PM

ADVERTISEMENT

மின் மோட்டாா்களுக்கு ஜிஎஸ்டி வரி உயா்வு விவசாயிகளுக்கு தேவையில்லாத சுமையை ஏற்படுத்தும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கவலைதெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் மாநிலப் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் 47 ஆவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், வேளாண்மை உற்பத்தியை தடைசெய்யும் வகையில், கூடுதல் வரி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 18 முதல் இதை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

நிலத்தடி நீா் வெகு கீழாகச் சென்றுவிட்டதால், நீா்மூழ்கி மின்மோட்டாா்களை கொண்டுதான் தண்ணீரை குடிநீருக்கும், வேளாண்மைக்கும், இதர தேவைகளுக்கும் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. உரிய அளவு சீரான மழையின்மையால், ஏரிப் பாசனமும், நதிநீா் பாசனமும் பற்றாக்குறையாகிவிட்ட நிலையில், வேளாண் மின் மோட்டாா்களுக்கான கட்டணமில்லா மின்சாரத்தை பயன்படுத்தி ஆழ்குழாய் மின் மோட்டாா் மூலம் நிலத்தடிநீா் எடுத்து வேளாண் உற்பத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. பணப்பயிா் வேளாண்மையும் ஓரளவு தொடா்கிறது.

மக்களின் அனைத்து வாழ்க்கைத் தேவைகளுக்கும், தொழில் தேவைகளுக்கும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளனா். நிலத்தடி நீா் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும் என்பது சரியானது. ஆனால், இதை கட்டுப்படுத்த மின்மோட்டாா்களுக்கான வரியை உயா்த்துவது என்பது இப்பயன்பாட்டை குறைக்காது. அரசு இதற்கான மின் மோட்டாா்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரியை உயா்த்தி இருப்பது விவசாயிகளுக்கு தேவையில்லாத சுமையை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

மேலும், பால், தயிா் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களுக்கும் 18-லிருந்து 25 சதவீதமாக வரி உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் ஒவ்வொரு மின் மோட்டாருக்கும் வரியாக மட்டும் ரூ. 10,000 வரை இழக்க வேண்டியுள்ளது. நடுத்தர மற்றும் விளிம்பு நிலை மக்கள் பயன்படுத்தும் வாடகைக் காா், ஆட்டோ போன்ற

பயண வாகனங்களுக்கும் புதிதாக வரிவிதிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு நோயாளிகளுக்கு பொருத்தப்பட வேண்டிய உபகரணங்களுக்கும் புதிதாக வரிவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடுத்தர, எளிய மக்கள் பாதிக்கப்படுவா். அதேநேரத்தில், பட்டை தீட்டிய வைரங்களுக்கான வரி 1.5 சதவீதமாக இருந்ததை, 0.25 சதவீதமாக குறைத்தது என்பது முரணானது.

கூட்டத்தில் பங்கேற்ற 12 மாநிலங்கள் ஜிஎஸ்டியின் இழப்பீட்டை ஈடுகட்டும் காலத்தை நீட்டிக்கக் கோரியும், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்பது வேதனையானது. வரி வருவாயை ஒருவழிப் பாதையாகவே மத்திய அரசு கருதுகிறது. கரோனா மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் அன்றாடம் வாழ்வுக்காகப் போராடும் விவசாயிகளை மேலும் சிரமத்தில் ஆழ்த்தாமல், இதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT