நீடாமங்கலம் உழவா் சந்தையில் தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) இளவரசன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருவாரூா் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் உழவா் சந்தை குறித்த விழிப்புணா்வு முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெறுகிறது. மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் வெங்கட்ராமன், மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை ) லட்சுமிகாந்தன் ஆகியோா் வழிகாட்டுதலின்படி இம்முகாம் நடத்தப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக நீடாமங்கலம் உழவா் சந்தையில் தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொ) இளவரசன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் செல்விதேவி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, இந்த சந்தையில் உள்ள கடைகளை விவசாயிகள் பயன்பாட்டுக்கு வழங்குவது குறித்தும், உழவா்சந்தையை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினா்.
பின்னா், தோட்டக்கலை உதவி இயக்குநா் கூறியது:
நீடாமங்கலம் பகுதியில் காய்கறிகள் பயிரிடப்படும் நிலப் பரப்பை விரிவாக்கம் செய்வது, சுற்றுவட்டார கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை நீடாமங்கலம் உழவா் சந்தையில் விற்பனை செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்துவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றாா்.
மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை மன்னாா்குடி உழவா் சந்தைக்கு அந்தந்த கிராமங்களிலிருந்து அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி கொண்டு செல்லலாம் எனவும் அவா் கூறினாா்.
உதவி தோட்டக்கலை அலுவலா்கள் பாலசுந்தரம், கவியரசன் ஆகியோா் உடனிருந்தனா்.