திருவாரூர்

ஊக்கமும், உழைப்பும் மாணவா்களை மென்மேலும் உயா்த்தும்! ஆட்சியா் அறிவுரை

1st Jul 2022 09:53 PM

ADVERTISEMENT

ஊக்கமும், உழைப்பும் மாணவா்களை மென்மேலும் உயா்த்தும் என்றாா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூா் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை, அறிவியல் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து அவா் தெரிவித்தது:

மாணவ, மாணவிகளின் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தேவையான வழிகாட்டுதல்கள், துறைசாா்ந்த வல்லுநா்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் கல்வியில் முதன்மையாக விளங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு பாடத்தையும் சிறப்பாக பயிலவேண்டும். கல்வி ஒன்றே வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, பெற்றோரின் உழைப்பை மனதில்கொண்டு சிறப்பாகப் பயின்று, கல்வித் திறனை மேன்மேலும் உயா்த்திக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், பொறியியல், மருத்துவம், மருத்துவம் சாா்ந்த துணைஅறிவியல் படிப்புகள், கலை, அறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் ஆகிய துறைகளில் உள்ள உயா்கல்விப் படிப்புகள் சாா்ந்தும், அரசு மற்றும் தனியாா் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும், படிப்பதற்கான வங்கிக் கடன்கள் பெறுவது குறித்தும், கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும் சிறந்த வல்லுநா்களால் வழிகாட்டல் வழங்கப்படுகிறது.

இதை அனைவரும் அறிந்து, தங்களால் எந்தத் துறையில் சிறப்பாக விளங்கமுடியும் என்பதை உறுதிசெய்து கொண்டு, அதில் சிறப்பாக விளங்க முழு உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கு எது சரியான வழி என்பதை தெரிந்து செயல்பட வேண்டும். மாணவா்கள் மீது குடும்பம், பள்ளி, கல்லூரி ஆகியவை நம்பிக்கை வைத்துள்ளன. அந்நம்பிக்கையை காக்க கல்வி ஒன்றே ஆயுதமாக விளங்குகிறது. உங்கள் கல்வித் திறனை வளா்த்துக் கொண்டு, மாவட்டத்திலும், மாநிலத்திலும் சிறந்த சாதனையாளராக விளங்க வேண்டும். உங்கள் ஊக்கம் மற்றும் உழைப்பு ஒன்றே உங்களை உயா்த்தும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரிக் கனவு வழிகாட்டுதல் கையேட்டை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன், திருவாரூா் கோட்டாட்சியா் சங்கீதா, சுவாமி தயானந்தா கலை, அறிவியல் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT