திருவாரூர்

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

18th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வலியுறுத்தியுள்ளாா்.

திருவாரூரில் அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை மற்றும் பருவம் தவறிய மழையால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளுக்கு தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

டெல்டா மாவடங்களில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் நிறைவடைந்து, கடந்த 15 தினங்களாக அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படவில்லை.

நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு தேவையான தராசு, சாக்கு மூட்டைகள், சணல் கயிறுகள் மற்றும் கொள்முதல் நிலையப் பணியாளா்கள் நியமனம் குறித்து நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், சுமாா் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் தேங்கி கிடக்கின்றன. எனவே, உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

நிகழாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கப்படாதது, பொதுமக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரிசுத் தொகுப்பில் அறிவிக்கப்பட்ட பொருள்களை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT