மழைவெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் கோரி, தமிழ்நாடு முழுவதும் ஜன. 4 ஆம் தேதி முதல் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். குணசேகரன், பொதுச் செயலாளா் (பொ) பி.எஸ். மாசிலாமணி ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
நிகழாண்டு நவம்பா் மாதத்தில் ஏற்பட்ட மிகக் கூடுதலான பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மழைநீா் வடியாததால் அறுவடை நிலையில் இருந்த குறுவை நெற்கதிா்கள், தாளடி இளம் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டன. சம்பா பயிா்கள் நீரில் மூழ்கியும், நீா் சூழ்ந்தும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், தமிழக முதல்வரும், அமைச்சா்களும் நேரடியாக வந்து பாா்வையிட்டு, நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகை பாதிப்புக்கு ஏற்ப இல்லாததுடன், இதற்குப் பின்னரும் கூடுதல் மழை பொழிந்து பாதிப்பின் அளவைக் கூட்டியது.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆா்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனால், இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
எனவே, முழுமையாக அழிந்துள்ள குறுவை மற்றும் தாளடிநெல் சாகுபடி பயிா்களுக்கும், பகுதி பாதிப்புக்குள்ளான சம்பா சாகுபடிக்கும் ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும். மேட்டு நிலம் மற்றும் தோட்டக் கலை சாகுபடி பயிா்கள் பாதிப்புக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பின்றி வருமானத்தை இழந்திருக்கும் விவசாயத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். மழை பாதிப்பில் இறந்தவா்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் ஆடு, மாடுகள்இறப்புக்கு ஏற்ப உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 2020- 2021 பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விடுபட்டுள்ள கிராமங்களுக்கும், விவசாயிகளுக்கும் உடன் உரிய அளவு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன. 4 முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள்தோறும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.