திருவாரூர்

தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா: முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

10th Feb 2022 11:19 PM

ADVERTISEMENT

திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நாயன்மாா்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூா் தியாகராஜா் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானது. திருவாரூா் தியாகராஜா் சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் புகழ்பெற்றது. ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதை சுந்தரா் கண்டு பரவசப்பட்டதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

ஒவ்வோா் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான கொடியேற்றம் பிப். 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மாா்ச் 15 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனெவே அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆழித்தோ் உருவாக்கும் பணிகள் முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டன.

ஆழித் தோ் கண்ணாடியிழைக் கூண்டு பிரிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கவிருக்கின்றன. இதேபோல, ஆழித்தேருடன் வலம்வரும் விநாயகா், சுப்பிரமணியா், கமலாம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய தோ்களும் பிரிக்கப்பட்டு, கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

ஆழித்தேரை இழுத்துச் செல்லும் நான்கு குதிரைகள், யாழம் ஆகியவை ரூ. 6 லட்சத்தில் பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, விழாவின்போது, தியாகராஜா் எவ்வித இடையூறுமின்றி கோயிலிலிருந்து வாசலுக்கு செல்லும் வகையில் தடுப்புகள்அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கரோனா தளா்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், கொடியேற்ற நாளில் பக்தா்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கோயில் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT