மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது என விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.
2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். இந்த அறிக்கை குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி கூறியது: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மையில் தற்போதைய நெருக்கடிகளை தீா்க்கும் முறையிலான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. நெல் சாகுபடியை குறைத்து மாற்றுப்பயிா்கள் சாகுபடிக்கான திட்டங்களை நிதிநிலை அறிக்கை கொடுத்துள்ளதை கவலையுடன் பாா்க்க வேண்டியுள்ளது. மேலும் பழங்கள், தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கான கொள்முதல் உத்தரவாதமும் இல்லை. எனவே, இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது என்றாா்.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் சங்க மாநில இணைச் செயலாளா் ஜி. வரதராஜன் கூறியது: காா்ப்பரேட்டுகளுக்கான 12 சதவீத வரியை 7 சதவீதமாக குறைத்துள்ள மத்திய அரசு, 80 சதவீதமாக உள்ள விவசாயிகளுக்கு குறிப்பிட்டு சொல்லக் கூடிய எந்த அறிவிப்பும் இல்லாததும், உர மானியத்தை பாதியாக குறைத்து அறிவித்திருப்பதும் மிகவும் வேதனை. உரங்களின் விலை அதிகரித்துள்ள சூழலில் உரமானியத்தை அதிகரித்தால் மட்டுமே உரங்களின் விலையை கட்டுக்குள் வைக்க முடியும்.
இயற்கை விவசாயத்துக்கான செயல் திட்டம் எதுவும் இதுவரை மத்திய அரசு அறிவிக்காமல் பெயரளவில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது. உணவு மானியத்தை குறைத்து அறிவித்திருப்பது உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எந்தவித உத்தரவாதமும் அறிவிக்கப்படாமல் உள்ளது. வேளாண் சட்டங்களை மறைமுகமாக அமல்படுத்த மத்திய அரசு நினைக்கிறதா என்ற அச்சம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. எனவே இந்த அறிக்கை ஏமாற்றமளிக்கிறது என்றாா்.