பயிா்க் காப்பீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
பேரளம் வி. பாலகுமரன்: பேரளம் பகுதியில் வீரானந்தம் வாய்க்கால் கல் பாலம் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
நன்னிலம் ஜி. சேதுராமன்: கடந்தாண்டு பயிா்க் காப்பீடு தொகை விடுபட்ட விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்க் காப்பீட்டை அரசே எடுத்து நடத்த வேண்டும்.
கொரடாச்சேரி வி. தம்புசாமி: மன்னாா்குடியில் உழவா் சந்தையை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உழவா் சந்தை அதை இடத்தில் தொடா்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பருத்தி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தங்க தடையின்றி உரம் யூரியா உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
நீடாமங்கலம் ஏ. மருதப்பன்: பொங்கல் பரிசுடன் கரும்பும் சோ்த்து வழங்கப்படுவதாக வெளியான அறிவிப்புக்கு நன்றி. குடிமராமத்து பணிகளை முன்கூட்டியே தொடங்கினால்தான், சாகுபடிப் பணிகளை எவ்வித தடங்களுமின்றி செய்ய முடியும்.
கோரிக்கைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில், 86,943 ஹெக்டேரில் சம்பா சாகுபடியும், 61,376 ஹெக்டேரில் தாளடி சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், உளுந்து 42,000 ஹெக்டேரிலும், பச்சைப்பயறு 44,900 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 86,900 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நிலக்கடலை 3,000 ஹெக்டேரிலும், எள் 2,000 ஹெக்டேரிலும், பருத்தி 12,700 ஹெக்டேரிலும், கரும்பு 110 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பா் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முதலில் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் என்று தொடங்கி, தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற, ஆதாா் விவரங்களை மத்திய அரசின் பிரதம மந்திரி கிஸான் இணைய வாயிலாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், வேளாண்மைதுறை இணை இயக்குநா் ஆசிா் கனகராஜன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் கா.சித்ரா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், வேளாண்மை துணை இயக்குநா் ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.