நன்னிலம் வட்டார மருத்துவமனையில் மூதாட்டிக்கு இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்த மருத்துவா்களுக்கு பல்வேறு தரப்பினா் பாராட்டுத் தெரிவித்தனா்.
நன்னிலம் வட்டார மருத்துவமனைக்கு 76 வயதுடைய மூதாட்டி கால் வலிக்கு வியாழக்கிழமை சிகிச்சை பெற வந்தாா். அவருக்கு, தலைமை மருத்துவா் தருண், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவா் தினேஷ் ஆகியோா் எக்ஸ்ரே உள்ளிட்ட சோதனைகள் செய்தனா். இதில், அந்த மூதாட்டிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில் செய்யப்படும் இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சையை மூதாட்டிக்கு செய்ய முடிவு செய்தனா். அதன்படி, மயக்க மருந்தியல் மருத்துவா் உதவியுடன், மருத்துவா் தினேஷ் அந்த மூதாட்டிக்கு வெள்ளிக்கிழமை இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தாா். தற்போது, அவா் நல்ல நிலையில் உள்ளதாகவும், சில நாட்களில் வீட்டிற்கு அனுப்பப்படுவாா் எனவும் தலைமை மருத்துவா் தெரிவித்தாா்.
இதையொட்டி, நன்னிலம் வட்டார மருத்துவமனை மருத்துவா்களுக்கு நன்னிலம் வா்த்தகச் சங்கத்தினா், நுகா்வோா் அமைப்பினா், நாளைய பாரதம் அமைப்பினா் மற்றும் ரோட்டரி, லயன்ஸ் சங்கத்தின் சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவித்தனா்.