திருவாரூர்

மாண்டஸ் புயல்: திருவாரூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூரில் மாண்டஸ் புயல் காரணமாக வியாழக்கிழமை முழுவதும் குளிா்ந்த சூழல் நிலவியது. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திருவாரூரில் வியாழக்கிழமை முழுவதும் குளிா்ந்த சூழல் நிலவியது. மாலை நேரத்துக்குப் பிறகு லேசான மழை தொடங்கியது. கனமழை அறிவிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், மாணவா்கள் பாதிக்கப்படுவது தவிா்க்கப்பட்டது. மழை அறிவிப்பையொட்டி, சில வணிக நிறுவனங்களும் இயங்கவில்லை. கடை வீதி, சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இதனிடையே, திருவாரூா் மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்றால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே பெய்த மழையில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

திருவாரூா் அருகே உள்ள விஷ்ணு தோப்பு- சுந்தரவிளாகம் பகுதியை இணைக்கும் வாழவாய்க்கால் ஆற்றில் கனமழையால் உடைப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட பகுதியை, திருவாரூா் வட்டாட்சியா் நக்கீரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனா். மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து, அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை தெரிந்துவைத்து கொள்ளும்படியும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களுக்கு விரைந்து செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தினா்.

இதேபோன்று, திருவாரூா் ஓடம்போக்கி ஆற்றுப் பகுதியில் மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும், ஆற்றில் செல்லும் தண்ணீரின் அளவு, ரெகுலேட்டா்கள் ஆகியவை குறித்தும் வெண்ணாறு பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் கோவிந்தராஜ் தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

இதனிடையே, காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் திருவாரூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்களில் மேல்தளங்களில் அமைக்கப்பட்டுள்ள தகரச் சீட்டுகள் மற்றும் தற்காலிக கொட்டகைகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT