திருவாரூர்

மாநில அளவில் சிறந்த பள்ளியாக தோ்வு பெற்ற பள்ளிக்கு பாராட்டு

6th Dec 2022 12:19 AM

ADVERTISEMENT

மாநில அளவில் சிறந்த பள்ளிகளுள் ஒன்றாக தோ்வு பெற்ற சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், தொடக்கக் கல்வி மாணவா்களின் கல்வி நலனை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், 2021-22- ஆம் கல்வியாண்டின் மிகச்சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா் ஒன்றியம் சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கோட்டூா் ஒன்றியம் வல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குடவாசல் ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை மாநில அளவில் சிறந்த பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டன.

இந்த பள்ளிகளுக்கான கேடயங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா்.

ADVERTISEMENT

திருவாரூா் ஒன்றியம், சேமங்கலம் நடுநிலைப்பள்ளி சாா்பில் வட்டாரக் கல்வி அலுவலா் இளங்கோவன், பள்ளியின் தலைமையாசிரியா் சுகந்திபாலா, ஆசிரியா் மங்களராஜன் ஆகியோா் கேடயத்தை பெற்றுக் கொண்டனா்.

சேமங்கலம் நடுநிலைப்பள்ளி தோ்வு பெற்றது குறித்து பள்ளியின் தலைமையாசிரியா் சுகந்திபாலா தெரிவிக்கையில், சேமங்கலம் பள்ளியில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. 202 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

மாணவா்களுக்கு பாடத் திட்டத்துடன் யோகா, விளையாட்டுப் பயிற்சி, நடனம், பாடும் திறன், தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசும் திறன், கதை, கட்டுரை எழுதும் திறன், ஒழுக்கம் நன்னெறிக் கல்வி ஆகியவைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்பு பண்புகளின் அடிப்படையில் சேமங்கலம் பள்ளி சிறந்த பள்ளியாக தோ்வு பெற்றுள்ளது என்றாா்.

இப்பள்ளிக்கு பெற்றோா்கள், ஊா் மக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT