திருவாரூர்

ஜெயலலிதா 6-ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

6th Dec 2022 12:21 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவுதினம் திருவாரூா் மாவட்டத்தில் அதிமுகவினரால் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு நகரச் செயலாளா் ஆா்.டி. மூா்த்தி தலைமையில் ஏராளமானோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் ஏ.என்.ஆா். பன்னீா்செல்வம், ஒன்றியச் செயலாளா்கள் பி.கே.யு. மணிகண்டன், செந்தில்வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடி தெற்குவீதி சந்திப்பில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலை அருகே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, மாவட்டச் செயலாளா் ஆா். காமராஜ் ஆகியோரது படத்துடன் கூடிய ஜெயலலிதா நினைவு நாள் விளம்பர பதாகைகளை அவரது அணியினா் வைத்திருந்தனா். இதை அகற்ற ஓ. பன்னீா்செல்வம் அணியினா் மன்னாா்குடி காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதனால், அந்த பதாகைகளை பெரிய படுதா கொண்டு மறைக்கும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டனா். இதற்கு இபிஎஸ் அணியினா் எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது, இருஅணியினரும் சிலை அருகே திரண்டதால் பாதுகாப்புக்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

நிகழ்விடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை, மன்னாா்குடி டிஎஸ்பி ஆ. அஸ்வத் ஆண்டோ ஆகியோா் இருதரப்பினரிடமும் தனித்தனியே பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து விளம்பர பாதாகைகளை மறைத்திருந்த படுதாவை போலீஸாா் அகற்றினா். இதையடுத்து, அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினா் தனித்தனியே எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு சென்றனா்.

அமமுக நகரச் செயலா் ஆ. ஆனந்தராஜ் தலைமையில் அக்கட்சினா் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தனா்.

நன்னிலம்: நன்னிலம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பிருந்து அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான டாக்டா் கே. கோபால், நகரச் செயலாளா் பக்கிரிசுவாமி ஆகியோா் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் அமைதி ஊா்வலமாக வந்து, நன்னிலம் பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினா்.

நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவருமான சிபி ஜி.அன்பு தலைமையில் கொல்லுமாங்குடி கடைத்தெருவிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினா்.

குடவாசலில் முன்னாள் எம்எல்ஏ-வும் ஒன்றியச் செயலாளருமான பாப்பா. சுப்பிரமணியம் தலைமையிலும், எரவாஞ்சேரியில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ராஜேந்திரன் தலைமையிலும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினா்.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் - வடபாதிமங்கலம் பிரதான சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இருந்து நகரச் செயலாளா் ஆா்.ராஜசேகரன் தலைமையில், அவைத் தலைவா் ஆா். குமாா், பொருளாளா் ஜெ. சுவாமிநாதன் உள்ளிட்டோா் ஊா்வலமாக வந்து லெட்சுமாங்குடி பாலத்தருகே ஜெயலலிதா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகர அதிமுக சாா்பில் காமராஜா் சிலை அருகே ஜெயலலிதா உருவப்படத்துக்கு, நகரச் செயலாளா் டி .ஜி. சண்முகசுந்தா் தலைமையில் தெற்கு ஒன்றியச் செயலாளா், கே. சிங்காரவேலு, முன்னாள் நகா்மன்றத் தலைவா் கே. உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் நகரச் செயலாளா் ஷாஜஹான் தலைமையில் ஒன்றியச் செயலாளா்கள் ராஜேந்திரன், ஆதிஜனகா், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் அண்ணா சிலையிலிருந்து ஊா்வலமாக வந்து, பெரியாா் சிலை அருகே ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல், வலங்கைமானில் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கா் தலைமை கிழக்கு ஒன்றியச் செயலாளா் இளவரசன், நகரச் செயலாளா் குணசேகரன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT