திருவாரூர்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி டிச.9-ல் சாலை மறியல்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி டிச.9-ல் சாலை மறியல் நடைபெறவுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் கௌரவத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

திருவாரூரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் மண்டல மறியல் போராட்ட தயாரிப்பு கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும், நியாயவிலைக்கடை, சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிா்ணயிக்கவேண்டும், பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை அமைக்க வேண்டும், அரசுப் பணியாளா்களை ஒப்பந்த அடிப்படையில் மாற்றும் அரசாணைகள் 115, 152, 139 ஆகியவற்றை உடனே ரத்து செய்ய வேண்டும்.

டாஸ்மாக் நிறுவனத்தின் வரவு செலவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவிக்கவேண்டும், ஊராட்சி தூய்மைக் காவலா்களுக்கு நேரடியாக நிா்வாகமே ஊதியம் வழங்கவேண்டும், நோ்மையான வெளிப்படை தன்மையுடன் கூடிய பணியாளா்கள் நியமனம், அரசாணைகளின்படி இடமாறுதல்கள், பதவி உயா்வுகள் உள்ளிட்டவை வழங்க வேண்டும் போன்ற 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 9-ஆம் தேதி சென்னை, சேலம், திருச்சி, கடலூா், மதுரை ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

போராட்டத்தில் ஈடுபடவுள்ள சங்க நிா்வாகிகளை, தமிழக முதல்வா் உடனடியாக அழைத்து, பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வுகாண வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT