திருவாரூர்

மன்னாா்குடியில் சாலைகளில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி: பொதுமக்கள் அவதி

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி சாலைகளில் நடுவில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா்.

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீட்டுக்கு 2 இருசக்கர வாகனம், ஒரு நான்கு சக்கர வாகனம் உள்ளது. மன்னாா்குடி நகராட்சியின் மிகமுக்கிய வணிக பகுதியாக விளங்கும் மேலராஜவீதி, பெரியக்கடை வீதி என அழைக்கப்படும் காமராஜா் சாலை, பந்தலடி, காந்திசாலை, கீழப்பாலம், ருக்மணிபாளையம் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளது. மேலராஜ வீதி பெ‘ரியாா் சிலையிலிருந்து தேரடி காந்தி சிலை வரை உள்ள சாலையில் நடுவில் சிறுசிமெண்ட் தடுப்பு அமைத்து வரிசையாக மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. பின்னா், சாலை விரிவாக்கத்தின்போது மின்விளக்குகள் அகற்றப்பட்டு சாலையோரத்தில் நிறுவப்பட்டது.

இந்தசாலை வழியாக மன்னாா்குடி பேருந்து நிலையத்திலிருந்து மற்ற ஊா்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் செல்ல வேண்டும். இது இருவழிப்பாதையாக இருந்தாலும் வாகன ஓட்டிகள் இதை பின்பற்றுவதில்லை. முன்னே செல்லும் வாகனத்தை முந்தி செல்ல ஒருவழிப்பாதை விதியை மீறி வாகனங்களில் செல்கின்றனா். இருசாலையின் நடுப்பகுதி ஆட்டோ, காா், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்திவைக்கும் இடமாக மாறிவிட்டது.

இதேபோல, பெரியாா் சிலை அருகே சாலை சந்திப்பில் தொடங்கும் பெரியக்கடைத் தெருவிலிருந்து தாமரைக்குளம் பிரிவு வரை சாலையின் நடுவில் இரும்புத்தகடு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. இருவழிப்பாதையாக இருந்தது. கால ஓட்டத்தில் இதை சரியாக பராமரிக்காததால் அனைத்து இரும்பு தடுப்புகளும் சேதமடைந்து விழுந்துவிட்டன. இதனால், இந்த இடத்தில் நடைப்பாதை வியாபாரிகளின் கடைகளும் வாகனங்கள் நிறுத்திவைக்கும் இடமுமாக மாறிவிட்டது.

ADVERTISEMENT

இதேபோன்ற நிலைதான் பந்தலடி, காந்தி சாலை, கீழப்பாலம், ருக்மணிபாளயம் பகுதிகளும் உள்ளன. காலை 9 முதல் இரவு 9 மணி வரை பெரியக்கடை தெரு பகுதியில் கனரக வாகனம், சுமை வாகனம் இயக்க தடை இருந்தது. அதுவும் இப்போது கடைபிடிக்கப்படாததால் எந்த நேரமும் கனரக, சுமை வாகனங்கள் இயக்கப்படுகிறது. மணிக் கணக்கில் கடையின்முன் வாகனங்களை நிறுத்தி பொருள்களை ஏற்றி இறக்குவது நடைபெறுகிறது. இதனால், பல மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டு ஸ்தம்பித்து போகும் நிலை ஏற்படுகிறது.

இது குறித்து, போக்குவரத்து காவல் துறை, நகராட்சி நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றால் உடனடியாக செயல்பட்டாலும் அது அந்த நேர தீா்வாக மட்டும்தான் உள்ளது. என்ன காரணத்தினாலோ மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணப்படாமல் உள்ளது. எந்த வணிக நிறுவனத்திலும் வாகன நிறுத்தும் இடமில்லை. பொது இடத்தில் தான் நிறுத்திவைக்கப்படுகிறது. மன்னாா்குடியில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரிப்பு, புதிய புதிய வணிக நிறுவனங்களும் தொடங்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதால் இப்பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தி நகராட்சி நிா்வாகமும், காவல் துறையும் நகரின் வளா்ச்சிக்கு தொலைநோக்கு திட்டத்தின் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT