திருவாரூர்

நன்னிலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் நோயாளிகள்

DIN

நன்னிலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் தினமும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனா்.

திருவாரூா் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் நன்னிலத்தில் மட்டுமே அரசு மருத்துவமனை உள்ளது. சுமாா் 15 கி.மீ. சுற்றளவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இம்மருத்துவமனைக்குத்தான் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். தினமும் புறநோயாளிகளாக சுமாா் 1,000 போ் வந்து செல்லும் இம்மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகள் உள்ளன.

அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே வசதி, பரிசோதனைக் கூடம், பிணவறை என அனைத்து வசதிகளும் இங்குள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவா் பணியிடங்கள் 14. ஆனால் இருப்பதோ 3 போ் மட்டுமே.

இங்கு பணியாற்றும் எக்ஸ்ரே எடுக்கும் அலுவலா் மற்றும் பரிசோதனைக் கூட அலுவலா்கள் அவ்வப்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு மாற்றுப் பணிக்காக அனுப்பப்படுகின்றனா். இதனால் நோயாளிகளுக்கு மிகுந்த காலதாமதமாவதுடன் கடும் அவதிக்கும் உள்ளாகின்றனா்.

இங்கு வரும் புற நோயாளிகள் பலா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதே வாடிக்கையாக உள்ளது. 40 படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனையில் இப்போது மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் உள் நோயாளிகள் இருக்கின்றனா். நிரந்தரத் தூய்மைப் பணியாளா்களும் இல்லாததால் சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது.

மகப்பேறு மருத்துவா் பற்றாக்குறையால் கா்ப்பிணிகள் அதிக பாதிப்படைகின்றனா். அவா்கள் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்வதற்குள்ளே மிகுந்த ஆபத்தான நிலைமை உருவாகிய சூழ்நிலைகள் பல ஏற்பட்டுள்ளது.

சில நேரங்களில் ரத்தப் பரிசோதனை செய்வதற்கும், எக்ஸ்ரே எடுப்பதற்கும் முடியாத நிலை உள்ளது. அவ்வப்போது மருத்துவா், பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கும், மருத்துவா்களுக்கும் இடையில் பிரச்னை ஏற்படும் சூழ்நிலையும் வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையை உடனே மாற்றவேண்டுமென நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு, நாளைய பாரதம் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மாவட்ட ஆட்சியா், நலப் பணிகள் இணை இயக்குநா் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி உள்ளனா்.

இது சம்பந்தமாக திருவாரூா் மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகம் மற்றும் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்தினா், போதிய மருத்துவா்களை நியமிக்க சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்திற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

இதுதொடா்பாக நன்னிலம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலரைத் தொடா்பு கொண்டு விரைவில் போதிய மருத்துவா்கள், பணியாளா்களை நன்னிலம் மருத்துவமனைக்குப் பணியமா்த்திடக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

விரைவில் பணியிடங்களை நிரப்பாவிட்டால் நன்னிலம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT