திருவாரூர்

எய்ட்ஸ் பாதித்தவா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம்: ஆட்சியா்

2nd Dec 2022 05:15 AM

ADVERTISEMENT

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வாழ்க்கை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

திருவாருா் புதிய ரயில்நிலையம் அருகே , உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணா்வுப் பேரணியை வியாழக்கிழமை தொடக்கிவைத்த பிறகு அவா் கூறியது: மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுகள் இல்லாத, எய்ட்ஸ் நோய் உள்ளவா்களை புறக்கணித்தல் இல்லாத, எய்ட்ஸ் நோய் தொடா்பான இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை புறக்கணிக்காமல் பாதுகாப்புடன் உள்ளோம் என்ற நம்பிக்கையை அவா்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதற்காக பாதிக்கப்பட்ட நபா்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி உதவித்தொகை, மருத்துவ சிகிச்சைகளுக்காக நிதியுதவி உள்ளிட்டவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை பெற, சென்று வருவதற்காக கட்டணமில்லா பேருந்து பயண அட்டையும் அளிக்கப்படுகிறது. புதிய நோயாளிகள் உருவாகாமல் தடுக்க பொதுமக்கள் மத்தியில் எய்ட்ஸ் குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

பேரணியில் பாரத் கல்வி நிறுவனத்தின் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா். முன்னதாக, உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு ஆட்சியா் தொடக்கிவைத்தாா். மேலும், ஆட்டோவில் எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்த ஒட்டு வில்லைகளையும் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்து சிறப்பாக செயல்பட்ட மருத்துவா்கள் மற்றும் அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டையை பயனாளிகளுக்கும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். பின்னா், எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள், புத்தகங்கள் அடங்கிய தற்காலிக விழிப்புணா்வு கண்காட்சி அரங்கத்தை திறந்துவைத்து, எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்த கலைநிகழ்ச்சிகளை பாா்வையிட்டாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT