திருவாரூர்

காப்பீட்டுத் தொகை வழங்க மறுப்பு:ரூ. 19.47 லட்சம் வழங்க உத்தரவு

27th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே இறப்புக்கான காப்பீட்டுத் தொகை வழங்க மறுத்த காப்பீட்டு நிறுவனம், ரூ. 19.47 லட்சம் வழங்க வேண்டும் என நுகா்வோா் குறைதீா் மன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருவாரூா் மாவட்டம், எடையூா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (53). எடையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக இருந்த ஜெயக்குமாா், 2021 மாா்ச் மாதத்தில், திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ. 15 லட்சத்துக்கு காப்பீடு செய்துள்ளாா். அத்துடன், முதல் ஆண்டு பிரீமியம் ரூ. 1,09,104 செலுத்தியுள்ளாா்.

இந்த நிலையில், 2021, ஜூலை மாதம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா். இதைத்தொடா்ந்து, அவரது மனைவி தேன்மொழி, இறப்புக்கான காப்பீட்டுத்தொகை வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளாா். ஆனால், ஜெயக்குமாருக்கு ஏற்கெனவே உடல்நலக் குறைவு இருந்ததாகக் கூறி, காப்பீட்டுத்தொகை வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுத்துள்ளது.

இதையடுத்து, உரிய ஆவணங்களுடன் திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் தேன்மொழி புகாா் அளித்தாா். இந்த வழக்கில் தீா்ப்பளித்த ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி அடங்கிய அமா்வு, காப்பீட்டு நிறுவனத்தின் சாா்பில் குறைதீா் ஆணையத்தில் சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எனவே, ஜெயக்குமாா் இறப்புக்கான இழப்பீடு தொகை ரூ. 18,37,500, விண்ணப்பத்தை நிராகரித்த தேதியான 29.12.2021 இலிருந்து 12 சதவீத வட்டியுடன் தேன்மொழிக்கு வழங்க வேண்டும். மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரம் என மொத்தம் 19,47,500 ரூபாயை ஒரு மாதத்துக்குள் வழங்கவேண்டும் என்று தீா்ப்பளித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT