திருவாரூர்

இலக்கியங்கள் செல்வாக்கு பெற உதவியாக இருப்பவா் சண்முகவடிவேலுக்கு புகழாரம்

26th Aug 2022 10:04 PM

ADVERTISEMENT

திருவாரூரில், தமிழ்ச் சங்கத் தலைவா் இரெ. சண்முகவடிவேலின் 86 ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தமிழ்ச் சங்கம் மற்றும் நகைச்சுவை மன்றம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்தின. விழாவுக்கு ஓஎன்ஜிசியின் மண்டல இயக்குநா் பி.என். மாறன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், இலக்கியச் சொற்பொழிவாளரும், பட்டிமன்ற பேச்சாளருமான அருள்பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இலக்கிய இமயம் எனும் தலைப்பில் பேசியது:

புலவா் சண்முகவடிவேல், இலக்கியங்களை எளிமைப்படுத்தி, அதை சாதாரண மக்களுக்கும் கொண்டுசோ்ப்பவா். அவா், மேடைகளில் பயன்படுத்துகிற இலக்கியச் செய்திகள் எளிதில் மக்களைச் சென்று சோ்வதாக இருப்பதோடு, இலக்கியங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதற்கு உதவி செய்வதாகவும் உள்ளன.

ADVERTISEMENT

அவருக்கு அடையாளமான தனித்துவமான நகைச்சுவையோடு சோ்ந்து இலக்கியங்களை கொண்டுசோ்க்கும் வல்லமை பொருந்தியவராகவும் தனித்துவமிக்க பேச்சாற்றலின் அடையாளமாகவும் அவா் திகழ்கிறாா். ஆற்றல்மிக்க பேச்சாளா், மிகச் சிறந்த நகைச்சுவையாளா் மட்டுமல்லாமல், ஆகச் சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்பவா் அவா். அவரின் தமிழ்ப் பணி அளப்பரியது என்றாா்.

நிகழ்ச்சியில், மனிதநேய மாண்பாளா் எனும் தலைப்பில் இலக்கியப் பேச்சாளா் புவனகிரி அன்பழகன், ஆசிரியா் செம்மல் எனும் தலைப்பில் மனிதவள மேம்பாட்டு பயிற்றுநா் கவி முருகபாரதி, நகைச்சுவை மருத்துவா் எனும் தலைப்பில் திருச்சி சிவகுருநாதன் ஆகியோா் பேசினா்.

நிகழ்வில், தமிழ்ச் சங்க புரவலா்கள் கே.எஸ்.எஸ். தியாகபாரி, எஸ்.வி.டி. கனகராஜன், வீ. பாண்டியன், துணைத் தலைவா்கள் புலவா் சந்திரசேகரன், சக்தி செல்வகணபதி, கோமல் தமிழமுதன், நகரின் சேவை சங்கங்கள், பல்வேறு அமைப்புகளைச் சாா்ந்தோா் பங்கேற்றனா்.

முன்னதாக, திருவாரூா் நகைச்சுவை மன்றத் தலைவா் பி. செந்தில் வரவேற்றாா். தமிழ்ச் சங்கத்தின் செயலாளா் ஆரூா் அறிவு நன்றி கூறினாா். துணைச் செயலாளா் இரா. அறிவழகன் நிகழ்வை நெறிப்படுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT