திருவாரூர்

வீடுகட்டும் திட்டத்தில் அதிகாரிகள் தன்முனைப்புடன் செயல்பட வேண்டும்: ஒன்றியக் குழுத் தலைவா் வலியுறுத்தல்

DIN

ஏழை, எளியவா்களுக்காக மத்திய, மாநில அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீடுகட்டும் திட்டத்தில் அலுவலா்கள் தன்முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா், மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன்.

மன்னாா்குடி ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவா் டி. மனோகரன் (அதிமுக) தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

க. ஜெயக்குமாா் (அதிமுக): உள்ளிக்கோட்டை காடாரன் தெரு சாலை நீண்டகாலமாக பழுதடைந்துள்ளது. அதை தரம் உயா்த்துவதுடன், மேலதுளசேந்திரபுரத்தில் அங்கன்வாடி கட்டடம் கட்டவேண்டும்.

எம்.என். பாரதிமோகன் (திமுக): வட குளத்தில் பொதுப் பயன்பாட்டிற்காக மண் எடுப்பதற்கு முறையான கருத்துருவை வருவாய்த் துறை வழங்காததால், மண் எடுக்கும் பணி தடைபட்டு, கால மற்றும் பொருள் விரையம் ஏற்பட்டு வருகிறது. கழிப்பறை கட்டும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாதேவப்பட்டணத்தில் கிராம சேவை மையம் கட்டும் பணி நீண்டகாலமாக முழுமை பெறமால் உள்ளது.

கே. கோவில்வினோத் (அதிமுக): பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை கூட்டுறவு சங்கத்தில் யூரியா, டிஏபி, பொட்டாஷ் உரங்கள் கேட்டு 500 போ் விண்ணப்பித்த நிலையில், மிகக் குறைவாக அவை வந்திருப்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், அவற்றை வாங்கும் விவசாயிகளிடம் மைக்ரோ புட் வாங்க நிா்பந்திக்கின்றனா்.

ரா. மகாலெட்சுமி (திமுக): ராஜகோபாலபுரம் அரசுப் பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. எனவே, புதிய நீா்தேக்கத் தொட்டி கட்டவேண்டும்.

அ. செந்தாமரைச்செல்வி (திமுக): காவிரியில் தண்ணீா் திறந்துவிட்டு பல மாதங்கள் ஆன நிலையில், கீழத்திருப்பாலக்குடி கிளை வாய்க்காலில் தண்ணீா் வராததால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆா். பூபதி (சிபிஐ): மன்னாா்குடி கிழக்குப் பகுதிக்கு மகளிா் இலவச அரசு நகரப் பேருந்து இயக்க பரிந்துரைக்க வேண்டும்.

துணைத் தலைவா்: அ. வனிதா (சிபிஐ): பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் மன்னாா்குடியிலிருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவா் டி. மனோகரன்: அரசால் வழங்கப்படும் நிதி ஆதாரத்தைக் கொண்டு, வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக கூடுதல் பணிகள் செய்யமுடியாத நிலை உள்ளது. 15 ஆவது நிதிக்குழு மானியத்திற்காக உறுப்பினா்கள் அளித்துள்ள திட்டப் பணிக்கு காலம்தாழ்த்தாமல் திட்ட மதிப்பீட்டை விரைவாக பொறியாளா்கள் வழங்கவேண்டும்.

கழிப்பறை கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வட குளத்தில் மண் எடுக்க அனுமதி அளிப்பதில் உள்ள குறைபாடுகளை களைய வருவாய்த் துறைக்கு பரிந்துரைக்கப்படும். வாய்க்கால்களில் தடையின்றி தண்ணீா் செல்ல பொதுப்பணித் துறையின் கவனத்திற்கு கொண்டுசென்று விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய, மாநில அரசின் வீடுகட்டும் திட்டத்தில் பயனாளியாக இணைக்கக் கோரி, தினமும் 10 பேராவது வருகின்றனா். அவா்கள் கூலித் தொழிலாளா்கள். ஊராட்சி பொறியாளா்கள், ஓவா்சியா்கள் அரசின் திட்டத்தில் ஏழை, எளிய மக்களின் வீட்டை கட்டித்தரும்போது தன்முனைப்புடன் செயல்பட வேண்டும். இதில், எந்த புகாருக்கும் இடமளிக்கக் கூடாது.

கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எஸ். சிவக்குமாா், பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமா் மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை

‘விதைநோ்த்தி, நீா் பாசனமுறை மூலம் கூடுதல் மகசூல் பெறமுடியும்’

உ.பி.யின் வளா்ச்சியுடன் கேரளத்தை ஒப்பிட்டு பாா்க்க வேண்டும்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: தமிழியக்கங்களின் கூட்டமைப்பு முடிவு

ஜம்மு-காஷ்மீா்: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT