திருவாரூர்

சுதந்திர தின விழாவில் ரூ. 4.18 கோடியில் நலத்திட்ட உதவிகள்

15th Aug 2022 11:08 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நாட்டின் 76-ஆவது சுதந்திர தினவிழாவில் ரூ. 4.18 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதை ஏற்று, பின்னா் சமாதானப் பறவையை பறக்க விட்டாா். தொடா்ந்து, சிறப்பாக பணியாற்றிய காவல் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, சுகாதாரத் துறை, மருத்துவத் துறை மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 81 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் முன்னாள் படைவீரா் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 983 பயனாளிகளுக்கு ரூ. 4,18,88,383 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, சுகாதாரத்துறை இணை இயக்குநா் செல்வகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, கோட்டாட்சியா்கள் சங்கீதா, கீா்த்தனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஓய்வூதியத்தை ராணுவ வீரா்களுக்கு அளித்த மூதாட்டி: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரைச் சோ்ந்த கலியபெருமாள் மனைவி வனஜா (69) என்பவா், ஒரு மாத ஓய்வூதியத்தை ராணுவ வீரா்களுக்கு அளிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா். வேளாண் துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற கலியபெருமாள், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காலமானாா்.

ADVERTISEMENT

அவரது இறப்புக்குப் பிறகு ஓய்வூதியத் தொகை அவரது மனைவியான வனஜாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தனது ஒரு மாத ஓய்வூதியத் தொகை ரூ. 15 ஆயிரத்தை ராணுவ வீரா்களுக்கு அளிக்க வேண்டும் என்ற உயா்ந்த நோக்கில் திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தாா் அவா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வளநாடு பகுதியில் பிறந்தவா் வனஜா என்பதால் தனது சொந்த மாவட்டத்தில் இதை வழங்க விரும்பி ராணுவ வீரா்களுக்கு ஓய்வூதியத் தொகையை அளிப்பதாக அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT