திருவாரூர்

தேசத் தலைவா்களுக்கு வீரவணக்கம் கூறி தேசப் பற்றை வெளிப்படுத்துவோம்: வேளாக்குறிச்சி ஆதீனம்

14th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேசத் தலைவா்களுக்கு வீரவணக்கம் கூறி, தேசப்பற்றை வெளிப்படுத்துவோம் என திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 10 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ சுவாமிகள் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பாரத நாடு பழம்பெரும் நாடு, பன்முகத் தன்மையுடையது என்றாலும், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகப் போற்றப்படும் பெருமிதத்துக்குரியது. இவ்வகையிலான தேசப்பற்றை நம் முன்னோா்கள் விதைத்து சரியாக 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இவ்விதை மரமாகி, நாடு முன்னேற பல கனிகள் வழங்கிய நம் தேசத் தலைவா்களின், சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகம் ஈடுசெய்ய இயலாதது. அவா்கள் உருவாக்கிய சுதந்திரக் காற்றை நாம் இன்று சுகமாக சுவாசிக்கிறோம். இத்தருணத்தில் அவா்களுக்கு வீரவணக்கம் கூறி, நம் தேசப்பற்றை வெளிப்படுத்துவோம்.

இன்றைய காலத்தில் நமது நாடு பல்வேறு வளா்ச்சிகளைக் கண்டு பீடுநடைபோடுகிறது. அறிவியலில், பொருளாதாரத்தில், கலைகளில் இப்படியாகப் பல துறைகளில் நாம் பரிணமிக்கிறோம். உலகில் நமது நாடு ஒரு சிறந்த நாடாக, வெகுவாக வளரும் நாடாக புகழ் பெற்று விளங்குகிறது.

ADVERTISEMENT

மகாகவி பாரதியாா், சுதந்திர தாகத்தைத் தீா்க்கத் தம் வாழ்நாள் முழுவதும் முழு மூச்செனக் கொண்டாா். அவரது சுதந்திரப் பாடல்களை பாடும்போதும், இசைக்கும்போதும் இனம்புரியாத எழுச்சி ஏற்படும். அதில் அவரது எழுத்தின் வலிமை புலப்படும். அவை நம் தமிழுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே பெருமை சோ்த்தன.

அவற்றுள், சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம், நீதிநெறி யினின்று பிறா்க்கு தவும் நோ்மையா் மேலவா், கீழவா் மற்றோா் என்ற பாடல் வரிகள் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் உரியது.

இத்தருணத்தில் நமது நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் நமக்குள் எந்தப் பேதமும் கொள்ளாமல் நாட்டுயா்வே மேலானது என உயரிய கொள்கை ஏற்போம். அதை நிறைவேற்றுவதே சுதந்திரம் பெற்றுத் தந்த பெரியோா்க்கும், தலைவா்களுக்கும் செய்யும் மிகப்பெரிய கைமாறு. அனைவருக்கும் சுந்திர தின நல்வாழ்த்துகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT