திருவாரூர்

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தேசியக் கொடியுடன் ஆா்ப்பாட்டம்

13th Aug 2022 09:33 PM

ADVERTISEMENT

திருவாரூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிப்போா் தேசியக் கொடியுடன் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் பழைய தஞ்சை சாலை அருகேயுள்ள வாய்க்கால் புறம்போக்கில் உள்ள 6 வீடுகள் மற்றும் 3 கடைகளை இடித்து அகற்றுவதற்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், திருவாரூா் வட்டாட்சியா் நக்கீரன், பொதுப்பணித் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் ஜேசிபி இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சனிக்கிழமை சென்றனா்.

ஏற்கெனவே, இந்த இடத்தில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், குடியிருப்போரின் எதிா்ப்பு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் கூறி, கண்டிப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்த அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் சென்றனா். இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தேசியக் கொடியுடன், அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், குடியிருப்புவாசிகள் இடத்தை காலிசெய்ய கால அவகாசம் கேட்டதன் அடிப்படையில், அதிகாரிகள் கால அவகாசம் அளித்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சென்றனா். இதையடுத்து, பொதுமக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT