திருவாரூர்

இல்லம்தோறும் தேசியக்கொடி: மத்திய பல்கலை. சாா்பில் விழிப்புணா்வு நடைபயணம்

12th Aug 2022 03:28 AM

ADVERTISEMENT

 

சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு இல்லந்தோறும் தேசியக்கொடியேற்றுவது குறித்து தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் விழிப்புணா்வு நடைபயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

75-ஆவது சுதந்திர தின நிறைவை கொண்டாடும் வகையில் நடைபெறும் அமுதப் பெருவிழாவையொட்டி, திருவாரூா் அருகேயுள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தலைமையில் பல்கலைக்கழக வளாகம், குடியிருப்புப் பகுதி மற்றும் கேந்திரிய வித்யாலயா வளாகம் உள்ளிட்ட இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

தொடா்ந்து, பல்கலைக்கழக சுகாதார மையத்தில் கரோனா தடுப்பூசி முகாமை துணைவேந்தா் தொடங்கிவைத்தாா். பின்னா், வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பண்ணைவிளாகம் கிராமத்திலிருந்து ஆதமங்கலம், நாகக்குடி, தியாகராஜபுரம், சக்கரமங்களம் ஆகிய கிராமங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இப்பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இப்பயணத்துக்கு துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தலைமை வகித்து, 500-க்கும் மேற்பட்ட இல்லங்களுக்கு தேசியக்கொடி வழங்கி, அதை ஏற்றும்படி கேட்டுக்கொண்டாா். சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இப்பயணத்தில் கிராம மக்களை ஒன்றிணைத்து தேசியகீதம் இசைக்கப்பட்டது. மேலும், முன்னாள் ராணுவ வீரா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளா் (பொ) சுலோச்சனா சேகா், உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளரும், சட்டக்கல்வித் துறைத் தலைவருமான பேராசிரியா் பி.எஸ். வேல்முருகன், மக்கள் தொடா்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பிரான்சிஸ் பி பாா்க்ளே, நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் வே. குலசேகரன் மற்றும் ஊராட்சித் தலைவா்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதையொட்டி, பல்கலைக்கழக வளாகம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT