திருவாரூர்

தாட்கோ கடனுதவி திட்டத்தில் 2,500 போ் பயன்: உ. மதிவாணன்

12th Aug 2022 10:02 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் தாட்கோ மூலம் 2,500 போ் பல்வேறு கடனுதவி திட்டங்களில் பயனடைந்துள்ளனா் என அதன் தலைவா் உ. மதிவாணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் தொழில் முனைவோா் திட்டம் மற்றும் இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுதவிக்கான மாவட்ட அளவில் தோ்வுக்குழு நோ்காணல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை தாட்கோ தலைவா் உ. மதிவாணன் தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் தாட்கோ மூலமாக வங்கிக் கடன் பெற 97 விண்ணப்பதாரா்களுக்கு நோ்காணல் நடைபெற்றது. இம்மாவட்டத்தில் ஜூன் 30 வரை 202 பேருக்கு ரூ.1.58 கோடி மானியமாக தாட்கோ மூலம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடனுதவி திட்டங்களில் பயன் பெற ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சமாக இருந்தது ரூ.3 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு டிராக்டா் கடன் வழங்குவதற்கு நிலம் அவசியமில்லை என்பதையும் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஆதிதிராவிட சமுதாய மக்கள் தட்கல் மூலம் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை ஆதிதிராவிடா் நலத்துறையின் சாா்பில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயனாளிகள் 10 சதவீதத் தொகையை செலுத்தினால், மீதமுள்ள தொகையை ஆதிதிராவிடா் நலத்துறை செலுத்தும். மாநிலம் முழுவதும் தாட்கோ மூலம் 2500 பயனாளிகள் பல்வேறு கடனுதவி திட்டங்களில் பயனடைந்துள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், தாட்கோ மேலாளா் விஜயகுமாா், பொது மேலாளா் (மாவட்டதொழில் மையம்) திருபுரசுந்தரி உள்ளிட்ட அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT