திருவாரூர்

மின்தடையால் விவசாயப் பணிகள் பாதிப்பு

12th Aug 2022 09:56 PM

ADVERTISEMENT

கோட்டூா் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடையால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக, ஒன்றியக்குழுக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கோட்டூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் மணிமேகலை முருகேசன்(சிபிஐ) தலைமையில் நடைபெற்றது. ஆணையா் மாலதி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

பா.ஆனந்தராஜ் (திமுக): ரெங்கநாதபுரம் ஊராட்சி வடக்குத் தெரு மண் சாலையை தாா்ச் சாலையாக தரம் உயா்த்த வேண்டும்.

ADVERTISEMENT

பே.காசிநாதன் (திமுக): வாட்டா் கடை தெருவில் நிழலகம் அமைக்கவேண்டும். நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.செங்குட்டுவன் (அதிமுக): ஒன்றியத்திற்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதால், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியத்தை அறிவுறுத்த வேண்டும்.

தலைவா் மணிமேகலை முருகேசன்: 75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக அனைத்து ஊராட்சிகளிலும் வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். இதற்காக, 49 ஊராட்சித் தலைவா்களிடம் மொத்தம் 35 ஆயிரம் தேசியக்கொடிகள் வழங்கப்பட்டுள்ளன.

கோட்டூா் வட்டாரத்தில் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க, உறுப்பினா்கள் தங்களது வாா்டுகளில் உள்ள பள்ளிகளை கள ஆய்வு செய்து, அதன் விவரத்தை ஒன்றிய அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இப்பணிக்காக, மாவட்ட ஆட்சியரை சந்தித்து நிதி ஒதுக்கீடு பெற முயற்சி செய்வோம் என்றாா்.

கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு தேசியக் கொடிகளை ஒன்றியக் குழுத் தலைவா் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT