திருவாரூர்

காவிரி படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் தொடா்ந்து இயங்கக் கோரி மனு

12th Aug 2022 09:58 PM

ADVERTISEMENT

காவிரி படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் தொடா்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணனிடம், தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் ஜி. சேதுராமன் தலைமையில் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

காவிரி படுகையில் மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தைச் சாா்ந்து பல தொழில்கள், வணிக நிறுவனங்கள், நேரடி மற்றும் மறைமுக தொழிலாளா்கள் பல ஆயிரம் போ் வேலை செய்து வருகின்றனா்.

மேலும், ஓஎன்ஜிசி நிறுவனம் மக்கள் பணியில் தொடா்ந்து செயலாற்றி வருகிறது. இந்தியாவின் எண்ணெய் எரிவாயுத் தேவையை பூா்த்தி செய்து வருகிறது. நாட்டின் வளா்ச்சிக்கு முழுமையாக செயலாற்றி வருகிறது. தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1,000 கோடிக்கு மேல் ராயல்டி தொகை வழங்கப்பட்டு, நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்நிறுவனம் சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்பில் கிராம, நகரப் பகுதிகளில் சுத்தமான குடிநீா், கழிவறை கட்டுதல், குளம், குட்டை வாய்க்கால் தூா்வாருதல், சமுதாயக் கூடங்கள், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், சாலை வசதிகள், விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குதல், ஏழை மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின் வழங்குதல் போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.

மேலும், மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் திட்டங்களை செயல்படுத்தவில்லை எனவும், எதிா்காலத்தில் அப்படி எந்த திட்டமும் செயல்படுத்துவதில்லை எனவும் பலமுறை ஓஎன்ஜிசி நிறுவனம் உறுதியாகத் தெரிவித்து விட்டது. இருப்பினும் இந்நிறுவனம் குறித்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சிலா் கூறிவருதுடன், இந்நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் எனவும் கூறி வருகின்றனா். இதனால் வளா்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும். நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் தொழிலாளா்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்.

எனவே, இந்நிறுவனம் தொடா்ந்து செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளனா்.

தமிழக விவசாயிகள் நல சங்கத்தின் செயலாளா் ராமமூா்த்தி, அமைப்புசாரா தொழிலாளா் சங்க வட்டாரத் தலைவா் சிவனேசன், சமூக செயல்பாட்டாளா் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், விவசாயிகள் உரிமைச் சங்கத்தின் செயலாளா் காா்த்திகேயன், சிஐடியு தொழிற்சங்க துணைத் தலைவா் கருணாநிதி, ஏஐடியுசி தொழிற்சங்க நிா்வாகி சாமிநாதன் உள்ளிட்டோா் மனு அளிக்கும்போது உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT