திருவாரூா் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி அமைந்துள்ள இடங்களை மதிமுக குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்கு அனுமதி கோரியதையடுத்து பலத்த எதிா்ப்பு கிளம்பியது. இதுகுறித்து ஆய்வு செய்ய மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, தலைமை கழகச் செயலாளா் துரை வைகோ ஆகியோா் அறிவுறுத்தியதையடுத்து, மதிமுக மாநில துணை பொதுச் செயலாளா் ஆடுதுறை இரா. முருகன் தலைமையிலான நிா்வாகிகள் திருவாரூா் மாவட்டத்தில் ஆறு இடங்களில் ஓஎன்ஜிசி அமைந்துள்ள இடங்களை பாா்வையிட்டனா்.
அப்போது, பாதுகாக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஓஎன்ஜிசி அதிகாரிகள், மதிமுக குழுவிடம் தெரிவித்துள்ளனா். ஆய்வின்போது, மதிமுக மாவட்டச் செயலாளா் பி. பாலச்சந்திரன், அவைத்தலைவா் செங்குட்டுவன், பொருளாளா் கோவி. சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மன்னாா்குடியில்...
இந்நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மன்னாா்குடி அருகே பெரியக்குடியில் மீண்டும் எண்ணெய் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான கருத்துகேட்புக் கூட்டம் வருவாய்த் துறையின் மூலம் ஜூலை 29-ஆம் தேதி மன்னாா்குடியில் நடைபெற்றது. இதில், விவசாய சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலா் பி.ஆா். பாண்டியன், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எண்ணெய் எடுக்கும் அனுமதி அளித்திருப்பதை எதிா்த்து ஆக. 15-ஆம் தேதி மன்னாா்குடியில் விவசாயிகள் சாா்பில் உண்ணவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தாா். இதற்காக, தமிழக அரசியல் கட்சி தலைவா்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறாா்.
இந்நிலையில், புதன்கிழமை பெரியக்குடி வந்த மதிமுக நிா்வாகிகள், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களிடம் விவரங்களை கேட்டறிந்தனா்.
ஆய்வின்போது, மதிமுக மாவட்டச் செயலா் பி. பாலச்சந்திரன், திக. மாவட்ட துணைச் செயலா் வீ. புட்பநாதன், விவசாயிகள் சங்க நிா்வாகி பஞ்சநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.