திருவாரூர்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தல்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மின்சார சட்டத் திருத்த மசோதாவை அறிமுக நிலையிலேயே மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு கொண்டுவந்த மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய அளவில் தொடா் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த சட்டத்துக்கு எதிராகவும், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் 13 மாதங்கள் விவசாயிகள், தொழிலாளா்கள் நடத்திய தொடா் போராட்டங்களுக்குப் பிறகு, மத்திய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுவதாக அறிவித்தது.

விவசாயிகளும் மத்திய அரசின் உறுதியை ஏற்று, உடனடியாக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனா். இதனிடையே, மத்திய அரசு தான்அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து, நாடாளுமன்றக் கூட்டத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

ADVERTISEMENT

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், விவசாயிகளின் வேளாண் உற்பத்தி உயா்வுக்காக கொடுக்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். தமிழகம் மற்றும் பிற மாநில உணவுத் தேவையை பூா்த்தி செய்து கொண்டிருக்கும் உணவு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். வீடுகளுக்கு மின் கட்டணச் சலுகை ரத்து செய்யப்படும். நெசவாளா்களுக்கு வழங்கப்படுகிற சலுகை மின்சாரம் ரத்து செய்யப்படும். மேலும், மின்கட்டணம் நாளடைவில் பல மடங்கு உயரும் வாய்ப்பை இச்சட்டம் வடிவமைக்கும் என்பதுடன் மின்துறை சில ஆண்டுகளில் தனியாரிடம் விடப்படும்.

இதைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் இறுதியில் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்க இருக்கின்றனா். எனவே, உடனடியாக இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT