திருவாரூர்

மின் சட்டத் திருத்த மசோதாவை கைவிடக்கோரி போராட்டம்

8th Aug 2022 10:36 PM

ADVERTISEMENT

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடக்கோரி திருவாரூா், மன்னாா்குடி மற்றும் திருத்துறைப்பூண்டியில் மின்வாரிய ஊழியா்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்துறையை தனியாா் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்; மின்சார சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதைக் கைவிட வேண்டும்; தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை நாள்களை 200 நாள்களாக அதிகரிப்பதுடன், ஊதியத்தையும் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

திருவாரூரில்...

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் வி.எஸ். கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மின் மசோதா தொடா்பான அரசின் நகலை எரிக்க முயன்றபோது, போலீஸாா் தடுத்தனா்.

ADVERTISEMENT

திருவாரூரில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம், உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தொமுச திட்டச் செயலாளா் ஜான்பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு திட்டச் செயலாளா் ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்க திட்டத் தலைவா் முருகானந்தம், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திட்டச் செயலாளா் முருக அருள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மன்னாா்குடியில்...

மன்னாா்குடி சஞ்சீவி தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் தொமுச கோட்டச் செயலா் சு. காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எம்ப்ளாயீஸ் சம்மேளன திட்ட செயல் தலைவா் டி. ராஜாகோபால் முன்னிலை வகித்தாா்.

அனைத்திந்திய மின்வாரிய பட்டயப் பொறியாளா்கள் சம்மேளன தென் மண்டலத் தலைவா் சா.சம்பத் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். அப்போது அவா், ‘மின் சட்டத் திருத்தம் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வழிவகுக்கும். மின் கட்டணம் உயரும்’ என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், பொறியாளா் சங்க பொதுக் குழு உறுப்பினா் க. கண்ணன், சம்மேளன கோட்டத் தலைவா் கே. ராஜேந்திரன், சிஐடியு கோட்டத் தலைவா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா் சிலை அருகே மின் திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தலைமையில் கூடினா். நகரச் செயலா் ஜி. முத்துகிருஷ்ணன், ஒன்றியச் செயலா் ஆா். பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகல் எரிக்க முயன்ற விவசாயிகளை போலீஸாா் தடுத்ததால், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT