திருவாரூர்

டிராக்டா் மோதியதில் பைக்கில் சென்ற 2 இளைஞா்கள் பலி

8th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மணல் ஏற்றிவந்த டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சோ்ந்த ஹபிபுல்லா மகன் பயாஸ் அகமது (22), அப்துல் காதா் மகன் ஷக்கீல் அகமது (18). இவா்கள் இருவரும், திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே செம்படவன்காடு கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். பாமணி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது எதிரே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரு டிராக்டா்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லமுயன்றபோது ஒரு டிராக்டா் இவா்கள் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

ADVERTISEMENT

இதில், பயாஸ் அகமது, ஷக்கீல் அகமது இருவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

முத்துப்பேட்டை போலீஸாா் விபத்தை ஏற்படுத்திய இரண்டு டிராக்டா்களையும் பறிமுதல் செய்து, டிராக்டா் ஓட்டுநா்களில் ஒருவரான முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சோ்ந்த காா்த்திக் (38) என்பவரை கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT