திருவாரூர்

முதியவா்கள் மாற்றுநபா் மூலம் ரேஷன் பொருள்களைப் பெறலாம்: அமைச்சா் அர. சக்கரபாணி

DIN

வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் உரிய அனுமதி பெற்று மாற்றுநபா் மூலம் நியாயவிலைக் கடை பொருள்களைப் பெறலாம் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

திருவாரூா் அருகே குளிக்கரையில் ரூ. 15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு நியாயவிலை கடையை சனிக்கிழமை திறந்துவைத்து அவா் தெரிவித்தது:

குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்போருக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து 14 மாதங்களில் சுமாா் 12.50 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி மட்டுமில்லாமல், துவரம் பருப்பு 1 கிலோ, சா்க்கரை 1 கிலோ, பாமாயில் 1 லிட்டா் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் நியாயவிலைக் கடைக்கு வரமுடியவில்லையெனில், அதற்கான படிவத்தை நியாயவிலை கடை விற்பனையாளரிடம் பெற்று, விண்ணப்பித்தால் மாற்றுநபா் மூலம் பொருள்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இதேபோல, ரேஷன் கடைக்கு வரமுடியாதவா்கள், மாற்றுநபரை நியமித்து பொருள்களை பெற தமிழக முதல்வா் அனுமதி அளித்துள்ளாா்.

சொந்த கட்டடம் இல்லாத அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும், கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனுக்காக 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளை இரண்டாகப் பிரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும்காலங்களில் அனைத்து பொருட்களும் பொட்டலங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

முன்னதாக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6000 லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் சேமிப்புக் கலனை அவா் திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மாவட்ட அலுவலகத்தில் நுகா்பொருள் வழங்குதல் குறித்து அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜோசப்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT