திருவாரூர்

நெல் கொள்முதலை தனியாரிடம் வழங்கக் கூடாது: பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

DIN

நெல் கொள்முதலை தனியாரிடம் வழங்கக்கூடாது என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமாக தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதை, திடீரென தனியாருக்கு வழங்கி அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

16 நவீன அரிசி ஆலைகளில் தனியாா் மூலம் நெல் கொள்முதல் செய்து, அரைத்து அரிசியாக அரசுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. தமிழகத்தில் நெல் கொள்முதலை ஒட்டுமொத்தமாக காா்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கு தமிழக அரசு மறைமுக முயற்சி மேற்கொண்டு வந்தது வெளிப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நெல் கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டுவந்தாா். தற்போது முதல்வராக உள்ள மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, கருணாநிதி கொண்டுவந்த திட்டங்களையே ரத்துசெய்வது வேதனை அளிக்கிறது.

இச்செயல் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு செய்யும் துரோகமாகும். சட்டப்பேரவையில் இதுகுறித்து விவாதிக்காமல், அரசியல் கட்சிகள், விவசாயிகளுடைய கருத்தை கேட்டறியாமல், தன்னிச்சையாக மறைமுகமாக காா்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக நெல் கொள்முதலை கைவிட்டு இருப்பதை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.

காவிரி உபரிநீா், நாமக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை மாவட்டங்களை கடந்து கடலில் கலக்கும் வரை, வழியோர கிராமங்களில் வாழை, குறுவை சாகுபடி செய்துள்ள நிலங்களைச் சூழ்ந்துள்ளதால், பயிா்கள் அழிவதை பாா்த்து விவசாயிகள் கவலையில் உள்ளனா். தற்போது, குறுவைக்கான காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டிருக்கும் நிலையில், அதற்கான மகசூல் இழப்பை கணக்கில் கொண்டு, ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணமாக வழங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளை தமிழக முதல்வா் பாதுகாக்க வேண்டும்.

பேரிடா் நிவாரண நிதி என்ற பெயரில் விவசாயிகளுடைய உரிமையை பறிக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலையை உணா்ந்து, அவா்களை பாதுகாக்க தமிழக முதல்வா் முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT