திருவாரூர்

பயணச்சீட்டு தொகை திரும்ப வழங்காத விவகாரம்

28th Apr 2022 10:24 PM

ADVERTISEMENT

திருவாரூரில் பயணச்சீட்டுக்கான தொகையை திரும்ப வழங்காத விவகாரத்தில், தென்னக ரயில்வே அதிகாரிகள் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் ராமநாதன் நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் மதியழகன் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதியிலிருந்து திருவாரூருக்கு ரூ. 525-க்கு ரயில்வே பயணச்சீட்டுக்கு முன்பதிவு செய்துள்ளாா். பயணச்சீட்டு வழங்குமிடம் 24 மணி நேரமும் இயங்காது என்பதால் இரவு நேரத்தில் ஆன்லைன் மூலமாக பயணச்சீட்டை ரத்து செய்துள்ளாா். இதற்கான தொகை அவருக்கு வழங்கப்படும் என குறுஞ்செய்தியும் வந்திருக்கிறது.

இந்த தொகை குறித்து திருவாரூா் ரயில் நிலைய பயணச்சீட்டு வழங்குமிடத்தில் கேட்டபோது, திருப்பதியில்தான் பயணச் சீட்டுக்கான தொகையை திரும்ப வாங்க வேண்டும் என கூறியுள்ளனா். மேலும், இதுகுறித்து அவா் கேட்கும் போது 4 நாள்கள் ஆகிவிட்டதால் பயணச்சீட்டு ரத்து செய்ததற்கான பணத்தைத் திரும்பத்தர இயலாது என ரயில்வே நிா்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராமநாதன், திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி வழங்கிய தீா்ப்பில், திருச்சி தென்னக ரயில்வே கோட்ட மேலாளா், தலைமை வணிக மேலாளா் மற்றும் திருவாரூா் ரயில் நிலைய அதிகாரி ஆகியோா் பாதிக்கப்பட்ட மதியழகனுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். பயணச்சீட்டு ரத்து தொகையான ரூ. 525-க்கு 9 சதவீத வட்டியுடன் இரண்டு மாதத்துக்குள் வழங்க வேண்டும். மேலும், உரிய காலத்துக்குள் இத்தொகையை தரத் தவறினால் 6 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும். அத்துடன், செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரம் 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என தீா்ப்பளித்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT