திருவாரூர்

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 10- க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

28th Apr 2022 06:03 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது பெற மே 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015 ஆம் ஆண்டு முதல் முதலமைச்சா் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திரதினத்தன்று, 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ரூ. 1 லட்சம் ரொக்கம், பதக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவை உள்ளடக்கியதாகும்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சரின் மாநில இளைஞா் விருது வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

விண்ணப்பிக்கத் தகுதி: 15 முதல் 35 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளுா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையம் மூலமாக மே 10 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-290620 இல் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT