திருவாரூர்

கூத்தாநல்லூா் வட்டத்தில் வாய்க்கால் தூா்வாரும் பணி: முதன்மைச் செயலாளா் நேரில் ஆய்வு

28th Apr 2022 06:04 AM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூா்: திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டம், சித்தனக்குடியில் வடிகால் வாய்க்கால் தூா்வாரப்படுவதை நீா்வளத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளா் சந்தீப் சக்சேனா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

சித்தனக்குடி ஊராட்சி, கா்ணாவூா் கிராமத்திற்கு உட்பட்ட பனையனாா் வடிகால் வாய்க்கால், தெற்கு பனையனாா் வடிகால் வாய்க்கால்களில் ரூ. 20 லட்சத்தில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில், நீா்வளத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளா் சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வுசெய்து, பணிகள் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

அப்போது அவா் கூறியது: தமிழக முதல்வா் ஆணைக்கிணங்க, காவிரி டெல்டா பகுதியின் 10 மாவட்டங்களில் ரூ. 80 கோடியில் தூா்வாரும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் மே 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்.

ADVERTISEMENT

அந்தந்த பகுதியிலுள்ள உழவா் குழுக்களின் கண்காணிப்புக் குழுவினா் ஒத்துழைப்போடு தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூா்வாரும் திட்டத்தின் கீழ் ரூ. 12 கோடியே 8 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில், 115 பணிகள் எடுக்கப்பட்டு, 1200.56 கி.மீ. தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் இட ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, தூா்வாரும் பணிகள் தொடா்ந்து நடைபெறும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமை செயற்பொறியாளா் எஸ். ராமமூா்த்தி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் பொ. முருகவேல், வடிநில உட்கோட்ட செயற்பொறியாளா் ஆா். சீனிவாசன், கொரடாச்சேரி உதவிப் பொறியாளா் சி. சிதம்பரநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT