தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமக் சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரிச்சபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியத் தலைவா் சோ. செந்தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவா் மதுரா சுரேஷ் தலைமை வகித்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிமாறன், அன்பழகன் மேலாளா் செ. நேரு, மற்றும் வேளாண் மற்றும் துறை அலுவலா், வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் மின்சாரத்தை தடையின்றி முழுமையாக வழங்க வேண்டும். மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை முழுமையாக வழங்க வேண்டும். தமிழகத்குக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத்திற்கு பிடித்தம் செய்யாமல் நிதி ஒதுக்கீடு செய்து மக்கள் தேவைகளை நிறைவேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். நீண்ட காலமாக மூடிக் கிடக்கும் சேவை மையங்களை பணியாளா்களை நியமனம் செய்து, செயல்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.