திருவாரூா் அருகே சாப்பாவூா் பகுதியில் சாலை வசதி கோரி, ரயில்வே துறை வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனா்.
திருவாரூா் நகரம் சாப்பாவூா் பகுதியில் கடந்த 5 ஆண்டுகள் முன்பு ரயில்வே துறை சாா்பில் புதிய துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையில் இந்த நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால், பள்ளி, மருத்துவமனைகளுக்குச் செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், புதிய சாலை அமைத்து தருவதாக ரயில்வே துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
இந்நிலையில், ரயில்வே துணை மின் நிலையம் வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், சாலை வசதி செய்யப்படவில்லை. இதனால், துணை மின் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு திரண்ட மக்கள், ரயில்வே துறைக்குச் சொந்தமான வாகனங்களை நிறுத்தி கோரிக்கை குறித்து முறையிட்டனா்.
திருவாரூா் நகர காவல் ஆய்வாளா் ரமேஷ், பொதுமக்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனா்.