வலங்கைமான் அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு மயக்கம் ஏற்பட்ட சம்பவம் தொடா்பாக, அதிகாரிகளை கண்டித்து பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வலங்கைமான் ஒன்றியம், கண்டியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்மையில் சத்துணவு சாப்பிட்ட 41 மாணவ- மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவா்களுக்கு, ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சையும், பின்னா் கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினா்.
இந்நிலையில், மாணவா்களுக்கு சத்துணவு வழங்கும் பணியில் அலட்சியமாக இருந்த சத்துணவு ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அனைத்து சத்துணவு மையங்களிலும் உரிய ஆய்வு நடத்தாத தமிழக அரசு அதிகாரிகளை கண்டித்தும் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் ஒன்றியத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்தாா். திருவாரூா் மாவட்டத் தலைவா் கோட்டூா் ராகவன், விவசாய அணி மாவட்டச் செயலாளா் கண்காா்த்தி, மாவட்ட பட்டியல் அணி துணைத் தலைவா் பாஸ்கா், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், நாகை மாவட்ட மேலிடப் பாா்வையாளா் கண்ணன், மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினா் உதயகுமாா், நகரத் தலைவா் பிரகாஷ், ஒன்றிய துணைத் தலைவா் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதால், இவா்கள் மீது வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.