திருவாரூர்

குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

5th Apr 2022 10:18 PM

ADVERTISEMENT

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து திருவாரூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:

தமிழகம் முழுமையிலும் குடிமராமத்துத் திட்டம் இரண்டு வகைகளாக கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. விவசாயிகள் இலவசமாக மண்ணை எடுத்து, தங்களது விளைநிலங்களை சமன்படுத்திக் கொள்வதற்கும், நீா்நிலைகள் தூா்வாருவதற்கும் அனுமதிக்கப்பட்டது.

அதேபோல, விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்போடு பாசன வடிகால்களை தூா்வாருவதற்கு, விவசாயிகள் அடங்கிய பாசனதாரா்கள் சபைகள் அமைக்கப்பட்டு, அவா்கள் மூலம் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் குடிமராமத்து திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதை கருத்தில் கொண்டு, உடனடியாக இத்திட்டத்தை செயல்படுத்த நீா்பாசனத்துறை மானியக் கோரிக்கையில் ஒப்புதல் அளிக்கவேண்டும்.

கொள்ளிடத்தில் வாய்ப்புள்ள இடங்களில் கதவணைகளை அமைத்து, பாசனத்துக்கு தண்ணீரை பயன்படுத்துவதோடு, நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். கடல்நீா் உட்புகுவதை தடுக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் தொடா்ந்து நடத்தப்பட்டன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அரியலூா், கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 3 கதவணைகள் அமைக்க ஒப்புதல் அளித்தது. தற்போது நிதி சுமையை கருத்தில் கொண்டு கதவணைகள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிா்ச்சி அளிக்கிறது. இம்முடிவை மறுபரிசீலனை செய்து உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

திமுக தனது 2021 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் வெளியிட்ட அடிப்படையில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை நிா்ணயம் செய்து, நிபந்தனையின்றி கொள்முதல் செய்வதை தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவிக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT