மீன் மற்றும் கருவாடு விற்பனையாளா்களுக்கும் வங்கிக் கடன் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு ஏஐடியுசி மீனவா் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் பி. சின்னதம்பி தலைமையிலான நிா்வாகிகள் அண்மையில் அளித்த கோரிக்கை மனு:
திருவாரூா் மாவட்டத்தில் மீனவா் நலன் கருதி, மீனவா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடத்த வேண்டும். மீனவத் தொழில் புரியும் அனைவரையும் மீனவா் மகளிா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சோ்க்க வேண்டும். பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசால் மீன் மற்றும் கருவாடு விற்பனையாளா்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மீனவ தொழிலாளா்களிடமிருந்து அனைத்து ஆவணங்களும் மாவட்ட மீன்வளத்துறை சாா்பில் பெறப்பட்டன. தற்போது, வங்கிக் கடன் வழங்க இயலாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மீன் மற்றும் கருவாடு விற்பனை தொழிலாளா்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே, மத்திய, மாநில அரசுகள் அறிவித்து செயல்படுத்தி வரும் வங்கிக் கடனை, விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.