திருவாரூர்

நீடாமங்கலத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

2nd Apr 2022 09:54 PM

ADVERTISEMENT

கோடை வெப்பத்தில் அவதிப்படும் பேருந்து பயணிகளின் சிரமங்களைப் போக்க நீடாமங்கலம் நகரில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

நீடாமங்கலம் பேரூராட்சியில் சுமாா் 20 ஆயிரம் போ் வசிக்கின்றனா். நீடாமங்கலத்தைச் சுற்றியுள்ள சுமாா் 30 குக்கிராமங்களைச் சோ்ந்த மக்கள், நீடாமங்கலம் வந்துதான் மன்னாா்குடி, தஞ்சாவூா், திருச்சி, கும்பகோணம், திருவாரூா், நாகை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு செல்லவேண்டும்.

நீடாமங்கலம் நகரில் ஏற்கெனவே பேருந்து நிலையம் இருந்தது. மக்கள்தொகை பெருக்கம், பேருந்துகளின் போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக, பேருந்து நிறுத்தங்கள் கூடுதலாக்கப்பட்டதால், ஏற்கெனவே இருந்த பேருந்து நிலையம் காலப்போக்கில் பயனற்ாகிவிட்டது. இதனால், அது உழவா் சந்தையாக மாற்றப்பட்டது.

தற்போது, பேருந்துகள் நீடாமங்கலம் நகரில் அண்ணாசிலை, பாரத ஸ்டேட் வங்கி, மேலராஜவீதி (அப்பாவுபத்தா்சந்து) ஆகிய இடங்களில் நின்று செல்கிறது. இந்த பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகள் நிழற்குடை கிடையாது. இதனால், பயணிகள் வெயில், மழைக்காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும்போது பெரும் அவதியடைகின்றனா்.

ADVERTISEMENT

போக்குவரத்து நிறைந்த நீடாமங்கலம் நகரில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் இல்லை என்பது இப்பகுதி மக்களின் பெரும் மனக்குறையாக உள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், நாள்தோறும் சுட்டெரிக்கும் வெய்யிலில் பேருந்து பயணிகள் பெரும் சிரமம் அடைகின்றனா். நிரந்தர பயணிகள் நிழலகம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறமிருந்தாலும், பொதுமக்களின் நலன் கருதி,

தற்காலிக கொட்டகைகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT