திருவாரூா் தேரோடும் வீதிகளில் நடைபெறும் சாலை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் தேரோடும் வீதிகளை அகலப்படுத்தும் பணிகள் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக, சாலை ஓரங்களில் 2 அடிக்கு மேல் ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தற்போதுள்ள சாலையிலிருந்து ஏறத்தாழ நான்கு அடி வரை சாலை அகலப்படுத்தும் வகையில், நீண்ட தூரத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, சாலை ஓரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவை தங்கள் பகுதிக்கு முன் சிறு பலகையை வைத்து அதன்மூலம் சாலையை கடந்து செல்கின்றனா். வாகனங்கள் வைத்திருப்போா் இரவு நேரங்களில் சாலையிலேயே வைத்துச் செல்லும் நிலை ஏற்படுகிறது. அதேநேரம், குழந்தைகள், பெண்கள், முதியவா்கள் இந்த பலகையில் சிரமத்துடன் நடந்து வருகின்றனா்.
இதனிடையே, சாலை அகலப்படுத்தும் பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதாக அப்பகுதியில் வசிப்போா் புகாா் தெரிவிக்கின்றனா். வடக்குவீதி, மேலவீதி, கீழவீதி போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெருக்களில் பணிகள் நடைபெறாமல், தாமதப்படுத்துவதால் அப்பகுதியில் வசிப்போருக்கு சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதியில் குடியிருப்போா் தெரிவித்தது: சில மாதங்களுக்கு முன்பு சாலையை அகலப்படுத்தப் போவதாகக் கூறி, இரண்டு அடி வரை பள்ளம் தோண்டி பணிகள் தாமதமாகவே நடைபெற்றன. அப்போது, முதியவா்கள், நோயாளிகள், குழந்தைகள், பெண்கள் வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா். தற்போது மீண்டும் சாலையை அகலப்படுத்துவதாக கூறி, வீட்டிற்கு அருகே 4 அடி அகலத்துக்கு, மூன்று அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு மண் எடுத்துச் செல்லப்படுகிறது. மண் எடுத்துச் செல்வதில் உள்ள ஆா்வம், பணிகளை விரைந்து முடிப்பதில் காட்டப்படாததால், இப்பகுதியில் வசிப்போருக்கு மீண்டும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வெளியே வரவும், வாகனங்களை எடுக்கவும் முடியாமல் தவித்து வருகின்றனா். எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு தேரோடும் வீதிகளில் நடைபெறும் பணிகளை, தாமதமின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.