திருவாரூர்

கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கியும் இடம் தேடுவதில் அலட்சியம்

30th Sep 2021 04:28 PM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும், இடம் தேர்வு செய்வதில் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்கி வருகிறது. சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், இடம் தேர்வு செய்யப் படுவதில் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் உள்ளனர். தொடக்கத்தில் பேரூராட்சியாக இருந்த கூத்தாநல்லூர், தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு, திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நீடாமங்கலம், குடவாசல், மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட வட்டங்களைச் சீரமைத்து, 55 வருவாய் கிராமங்களைக் கொண்டு, கூத்தாநல்லூர் வட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது.

24 வார்டுகளைக் கொண்ட கூத்தாநல்லூர் நகராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த வட்டத்தில், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் மற்றும் கமலாபுரம் என மூன்று பிர்க்காக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மூன்று பிர்க்காக்களிலும், கூத்தாநல்லூர் 17, கமலாபுரம் 15 மற்றும் வடபாதிமங்கலம் 23 என 55 கிராமங்கள் உள்ளன. கூத்தாநல்லூர் வட்டத்தில், மொத்த மக்கள் தொகை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், செளதி அரேபியா, புருனே, இலண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில்தான் அரசுப் பணி, தனியார் பணி மற்றும் ஒப்பந்தப் பணிகள் என பணியாற்றுகிறார்கள்.

இதையும் படிக்க- ‘நான் அவர் இல்லைங்க’: தவறாக டேக் செய்வதால் கதறிய அம்ரீந்தர் சிங்!

ADVERTISEMENT

வெளிநாட்டில் சம்பாதித்தாலும், இவர்கள் தங்களது சொந்த மண்ணிலேயே தான் முதலீடு செய்கின்றனர். வெளிநாடுகளில் உள்ளது போலவே, கண் கவரும் வகையில் தங்களது வீடுகளை கட்டியுள்ளனர். அதனால், இவ்வூர் சின்ன சிங்கப்பூர் எனவும் அழைக்கப்படுகிறது. கூத்தாநல்லூர் நகராட்சி 8 ஆவது வார்டில், சையது உசேன் சாலையில், வாடகைக் கட்டடத்தில் தான் வட்டாட்சியர் அலுவலகம் இயங்குகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை இந்தக் கட்டடத்தில்தான் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வாடகைக்கு விடுவதற்கு முன்பாக வீடாக இருந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இப்பகுதிக்கு வந்தால், இந்த வீட்டில் தான் தங்கிச் சென்றுள்ளார்.

தற்போது செயல்படும் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலகம், நலிந்தோர் நலத்திட்ட சமூக பாதுக்காப்புத் திட்ட அலுவலகம், தேர்தல் பிரிவு, நில அளவையாளர், ஆதார் மையம், இ சேவை மையம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான ஊக்கத் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர், கல்வி உதவி, உழவர் பாதுக்காப்புத் திட்ட சிறப்பு நிதி, திருமண உதவி, திருநங்கைகளுக்கான உதவி, பட்டா, சிட்டா , பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் பொதுமக்கள் வர வேண்டிய இடம் வட்டாட்சியர் அலுவலகம்தான். இங்கு திங்கள்கிழமை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அலுவலகத்தின் வெளியிலும் நிற்பதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் கூட இடமில்லை. திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல், வலங்கை மான் உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் சொந்தக் கட்டடத்தில் தான் வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. ஆனால், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் மட்டும் வாடகைக் கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. வாடகையாக, மாதம் ஒன்றுக்கு ரூ.26,400 என, ஆண்டுக்கு ரூ.3,16,800 வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்காக சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 75 லட்சம் ஏதுக்கீடு செய்யப்பட்டும், இதுவரை தேவையான இடத்தை தேர்வு செய்யப்படவில்லை.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட கூத்தாநல்லூரில் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டுவற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடிப் பார்வையில், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் என்.கவிதா கூறியது. வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு, பல்வேறு இடங்களில் தேவையான, பொதுமக்களுக்கு வசதியான இடத்தை பார்வையிட்டு வருகிறோம். கூத்தாநல்லூர் பேருந்து நிலையம் அருகே ஒரு இடத்தை பார்வையிட்டுள்ளோம். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, இடத்தைப் பெற்று, விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும் என்றார்.

Tags : Koothanallur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT